இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று மொஹாலியில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 22 ஓட்டங்களால் வீழ்த்திய நியூஸிலாந்து அணி இலகுவாக அரையிறுதிக்கு நுழைந்தது.
நேற்று நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் துடுப் பெடுத்தாடியது. அதன்படி மார்டின் குப்திலும், வில்லியம்ஸனும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். குப்தில் அதிரடி காட்ட வில்லியம்ஸன் நிதானமாக விளையாடினார். குப்திலின் அதிரடியால் நியூஸிலாந்து 6 ஓவர்கள் முடிவில் 58 ஓட்டங்களைக் குவித்தது. வில்லியம்ஸன் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய முன்றோ, அண்டர்ஸன், ரோன்ஞ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
முக்கிய கட்டத்தில் 80 ஓட்டங்களைப் பெற்று ஆடிக்கொண்டிருந்த குப்தில் ஆட்டமிழக்க, நியூஸிலாந்தின் ஓட்ட வேகம் குறைந்தது. 20 ஓவர்கள் முடிவில் நியூஸி. 5 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களைக் குவித்தது.
181 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு, தொடக்க வீரர்களான
ஷர்ஜில் மற்றும் செஷாட் ஆகியோர் அதிரடி ஆரம்பத்தைக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் 5 ஓவர்களுக்கு 1 விக்கெட்டை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தது பாக். இதில் ஷர்ஜில் (47), செஷாட் (30) ஆட்டமிழக்க பாகிஸ்தானின் ஓட்ட வேகம் குறைந்தது. அடுத்துவந்த அப்ரிடி 19 ஓட்டங்களுடன் வெளியேற பாகிஸ்தானின் தோல்வி உறுதியானது.
இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.