இது எமக்கு மிகப்பெரிய தோல்விதான். இதை ஈடுகட்ட எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக உழைப்போம் என்று தெரிவித்தார் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ்.
நியூஸிலாந்து தொடர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் இருபதுக்கு 20 அணியின் தலைவர் சந்திமால், இலங்கை அணியின் பயிற்சியாளர் ஜெரோம் ஜெயரத்ன, அணியின் முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் பெரிதும் பேசப்பட்ட விடயம், வீரர்களின் நடத்தை குறித்துத்தான். இதற்கு பதிலளித்த இலங்கை அணியின் முகாமையாளர், இதை நான் மறுக்கவும் மாட்டேன் ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இதுகுறித்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில் அனைத்தும் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்றார்.
அதேகேள்விக்கு பதிலளித்த அஞ்சலோ மெத்தியூஸ், இது ஒன்றும் புதிதல்ல.
தொடர் ஒன்றில் அணி தோல்வியடையும்பட்சத்தில் இதுபோன்ற விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் வரும். ஆனாலும் எமது ஓரிரு வீரர்கள் அணியின் சட்டதிட்டங்களை மீறி நடந்துகொண்டார்கள்தான். அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேநேரம் தொடர் தோல்விகுறித்து அவரிடம் கேட்டதற்கு, நாம் அனைத்து விதமான முயற்சிகளையும் அதேவேளை பல வியூகங்களையும் செலுத்தித்தான் விளையாடினோம். ஆனால் அனைத்தும் பயனற்று போய்விட்டது. மூன்று தொடர்களிலும் தோல்வியடைந்தையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம்.
சங்கா, மஹேல போன்ற அனுபவ வீரர்கள் இல்லாததின் இடை வெளி இப்போதுதான் விளங்குகிறது. ஆனால் நான் அதைக் காரணமாக சொல்லமாட்டேன். இளம் வீரர் களை நாம் அந்த இடத்திற்கு தயார்படுத்திக்கொள்ளவேண்டும். இந்தத் தொடரில் துஷ்மந்த சமீர, வண்டர்சே போன்ற சிறந்த வீரர்களையும் அடையாளம் கண்டுள்ளோம் என்றார்.